உலக சமயங்களை ஒன்றிணைக்கும் தமிழர் சமயமும் தமிழர் ஆன்மவியலும்-13

2.2. மெய்யியல்

2.2.1.  அறிவு – ஞானம்

அறிவு என்பது வேறு, ஞானம் என்பது வேறு, இரண்டும் ஒன்றல்ல. மெய், வாய், மூக்கு, கண், செவி ஆகிய ஐம்புலன்கள் வழி பெறுவது அறிவு. ஆறாவது அறிவின் வழி பெறுவது ஞானம். மனிதனைத் தவிர மற்ற உயிரினங்களுக்கு ஒன்று முதல் ஐந்து வகையான அறிவுகள் செயல்படுகின்றன. மனிதனுக்கு மட்டுமே ஆறாவது அறிவு செயல்படுகிறது. இதனால், மனிதனைத் தவிர மற்ற உயிரினங்களுக்கு ஞானம் இருக்கிறது என்று கூறும் மரபு இல்லை. இதனால் ‘Philosophy’ என்னும் ஐரோப்பிய மொழிச் சொல் அறிவுக்கும் ஞானத்திற்கும் சேர்த்துப் பயன்படுத்தப்பட்டு வருவதால் அது தவறான புரிந்து கொள்ளலுக்கு இடம் கொடுக்கிறது.

2.2.2. தமிழ் மரபிலுள்ள ‘காட்சி’

மெய்யியல் என்பது சமயத்தோடு தொடர்புடையது. சமயங்கள் அனைத்தும் ஆசியாவிலிருந்தே எழுந்துள்ளமையைப் பார்த்துள்ளோம். ஆசியாவில், சிறப்பாக இந்தியாவில், அதிலும் சிறப்பாகத் தமிழ் மொழியில் மெய்யியல் வளர்ச்சி பெற்றுள்ள நிலை, ‘காட்சி’ எனும் தமிழ்ச் சொல்லால் வெளிப்படுத்தப்படுகிறது. இந்தக் காட்சியை உடையவர்களைத் திருவள்ளுவர் ”மாசறு காட்சியவர்” (குறள்; 199, 352) என்னும் தொடரால் விளக்குகின்றார். ஐம்பொறிகளில் ஒன்றான புறக்கண்ணால் காணுவது குறையுள்ள காட்சி என்றும், ஆறாவது அறிவுக்குக் காரணமான அகக் கண்ணால் காணுவது குறையற்ற ‘மாசறு காட்சி’ என்றும் அவர் சுட்டுவது எண்ணிப்பார்க்கத்தக்கது. இந்த மாசறு காட்சியை உடையவர்களிடமிருந்தே ஞானம் வெளிப்படுகின்ற காரணத்தால் மெய்யியல், ‘காட்சி’ என்னும் பெயரால் தமிழ் மரபில் குறிக்கப்படுகிறது. ஆகவே, தமிழர் மரபிலுள்ள ‘காட்சி’ எனும் சொல்லுக்கும் ‘டட்ண்ப்ர்ள்ர்ல்ட்ஹ்’ எனும் சொல்லுக்கு ஐரோப்பியர் கொடுக்கும் பொருளுக்கும் வேறுபாடு காணப்படுகிறது.