உலக சமயங்களை ஒன்றிணைக்கும் தமிழர் சமயமும் தமிழர் ஆன்மவியலும்-14

2.2.3. ஐரோப்பியர் மரபிலுள்ள “மெய்யியல்’

ஐரோப்பியர்கள் ‘Philosophy’ எனும் சொல்லில் அறிவு எனும் பொருளை அடக்கி, அகக் காட்சியிலிருந்து வெளிப்படும் ஞானத்திற்குத் தொடர்பில்லாத, ஐரோப்பியர்களுக்குத் தேவையான வணிகம், அரசியல் இவற்றைச் சிறப்பாகச் செய்யும் அறிவுக்குப் பயன்படுத்துகின்றனர். இதனால் ஐரோப்பியச் சிந்தனைக்குட்பட்ட மெய்யியல், ஞானத்திலிருந்து விலகி அறிவுக்குப் பயன்படுத்தப்படுகிறது. இதனால், மெய்யியல் எனும் பொருளைக் கொடுக்கும் ‘Philosophy’ எனும் ஐரோப்பியச் சொல், ஞானத்தை அறிவது எனும் நிலையிலிருந்து தாழ்ந்து, அறிவை அறிவது எனும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இதனால், இன்று ஐரோப்பியர்களால் சிறப்பிக்கப்படும் அறிவியல், உயிரை அறியாதிருப்பதைப் போன்று, இன்று ஐரோப்பியர்களால் சிறப்பிக்கப்படும் ‘டட்ண்ப்ர்ள்ர்ல்ட்ஹ்’ அகக் காட்சியின் பயனாகப் பெறப்படும் ஞானத்தை அறிய முடியாமல் திகைத்து நிற்கிறது. இதன் பயனாக ஐரோப்பியச் சிந்தனைக்குள்ளாக்கப்பட்ட மெய்யியல், உண்மையை உணரவும் உணர்த்தவும் இயலா நிலையில் இருக்கிறது.

2.2.4. தமிழ் மரபிலுள்ள ‘மெய்யியல்’

தமிழ் மரபிலுள்ள மெய்யியல், மெய்யாகிய உண்மையை அழகாக விளக்கிக் கொண்டிருக்கிறது.

”ஐயுணர்வு எய்திய கண்ணும் பயமின்றே

மெய்யுணர்வு இல்லா தவர்க்கு”          (குறள்-354)

என்று ஆறாவது அறிவுக்குரிய உணர்வைப் பற்றியும்

”இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி

மாசறு காட்சி யவர்க்கு”                      (குறள்-352)

என்று ஆறாவது அறிவுக்குரிய அகக் காட்சி பற்றியும் திருவள்ளுவர் தெளிவாகக் கூறுகின்றார்.

இந்தத் தெளிவு ஐரோப்பியர் கூறும் ‘Philosophy’யில் முழுமையடையவில்லை என்பது நோக்கத்தக்கது.

தமிழ் மரபிலுள்ள காட்சியில் ஆறுவகை உயிரினங்களும் வேறுவேறாகப் பிரிக்கப்பட்டு, ஆறுவகை அறிவுகளும் ஆழ்ந்து எண்ணிப்பார்க்கப்பட்டு, ஆறாவது அறிவுக்குரிய ஞானத்தை வெளிப்படுத்துவதே மெய்யியல் அல்லது தரிசனம் அல்லது காட்சி என்று கூறப்படுகிறது. இந்தத்தெளிவு ஐரோப்பியர்களுடைய ‘Philosophy’ யில் இல்லை.

2.2.5. சமயம் சாராத மெய்யியல் – சமயம் சார்ந்த மெய்யியல்

இந்திய மெய்யியலும் இந்தியச் சமயங்களும் ஒன்றோடொன்று இணைந்து காணப்படுகின்றன. சமயம் என்பதில் நம்பிக்கைகள் புகுந்து விடுகின்றன. ‘Philosophy’ என்பதும் ‘காட்சி’ என்பதும் நம்பிக்கைகளைக் கேள்விக் குறியாக்கும் மெய்யியலை விளக்க முயலுகின்றன. இதனால், சமயம் சார்ந்த ‘Philosophy’ சமயம் சாராத ‘Philosophy’ ஆகிய இரு கூறுகள் ‘Philosophy’யில் உள்ளடங்கியிருக்கின்றன. சமயம் சாராத ‘Philosophy’ யாக European ‘Philosophy’ விளங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால், ‘Indian Philosophy’ என்பது சமயம் சார்ந்த ‘Philosophy’ யாக விளங்கிக் கொண்டிருக்கிறது.

2.2.6. ஆத்திக  சமய  மெய்யியல் – நாத்திக  சமய  மெய்யியல்

”உள்ளத்தைச் சமைத்துப் பக்குவப்படுத்துவதே சமயம்” என்று, சமயம் எனும் சொல்லிற்கு விளக்கம் கொடுக்கப்படுகிறது. சமயத்தைக் குறிக்கும் ”மதம் என்ற சொல்லுக்கு நிலையாக மதிக்கப்படும் கொள்கை” என்று விளக்கம் கொடுக்கப்படுகிறது. ஆகவே, சமயம் அல்லது மதம் சார்ந்த இந்திய மெய்யியல், கடவுள் கொள்கையுடைய ஆத்திக சமயம் சார்ந்த மெய்யியல் எனவும், கடவுள் மறுப்புக் கொள்கையுடைய நாத்திக சமயம் சார்ந்த மெய்யியல் எனவும் இரண்டாகப் பிரிந்து நிற்கிறது. கடவுள் கொள்கையுடைய ஆத்திக சமயம் சார்ந்த மெய்யியல் கடவுள் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு விளக்கப்படுகிறது. கடவுள் மறுப்புக் கொள்கையையுடைய நாத்திக சமயம் சார்ந்த மெய்யியல் பிறவிச் சுழற்சிக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு விளக்கப்படுகிறது.

கடவுள் மறுப்புக் கொள்கையையுடைய நாத்திக சமயங்கள் இந்தியாவில் மட்டுமே தோன்றியுள்ள காரணத்தாலும், இந்தியாவுக்கு வெளியே எங்குமே கடவுள் மறுப்புக் கொள்கையையுடைய நாத்திக சமயங்கள் தோன்றாத காரணத்தாலும், இந்தியாவுக்கு வெளியிலுள்ள அறிஞர்கள் கடவுள் மறுப்புக் கொள்கையுடைய நாத்திக சமயம் சார்ந்த மெய்யியலோடு தொடர்புடைய பிறவிச் சுழற்சிக் கொள்கையைப் புரிந்து கொள்ளுதல் கடினமான ஒன்றாகும்.

2.2.7. சமயம்

‘சமயம்’ அல்லது ‘மதம்’ என்று கூறும்பொழுது, இது பொதுவாக, கடவுள் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது என்று எண்ணப்படுகிறது. சமயம் என்பது கடவுள் மறுப்புக் கொள்கையையும் அடிப்படையாகக் கொண்டது என்பது இந்தியாவின் நிலை.

வழிபாடு வேறு; சமயம் வேறு. வழிபாடு, உலகில் மனிதர்கள் எங்கெங்கெல்லாம் வாழ்ந்தார்களோ அங்கங்கெல்லாம் உருவானது. ஆனால், சமயம் என்பது ஆசியாக் கண்டத்தில் மட்டுமே உருவானது. ஆசியாவுக்கு வெளியே எந்தச் சமயமும் உருவாகவில்லை என்னும் உண்மை ஆழ்ந்து நோக்கத்தக்கது. ஐரோப்பிய மொழிச் சொல்லாகிய ‘தங்ப்ண்ஞ்ண்ர்ய்’  என்பது வழிபாட்டிற்கும் சமயத்திற்கும் உள்ள வேறுபாட்டை அறியாத நிலையே.

நன்றியுணர்வின் காரணமாகவும், பயத்தின் காரணமாகவும் உலகம் முழுவதும் பல்வேறு வகைப்பட்ட வழிபாடுகள் தோன்றியுள்ளன. உலக மக்களில் ஒவ்வொரு கூட்டத்தினருக்கும் தனித்தனியே வழிபாடுகள் இருக்கின்றன. அந்த வழிபாட்டில் மற்றக் கூட்டத்தாரை அல்லது மற்ற இனத்தவரைச் சேர்த்துக் கொள்ளாமல், தங்கள் குல வழிபாடாக அதைச் செய்து வருவதை இன்றும் நம்மால் காணமுடிகிறது. அந்த வழிபாட்டை ‘நானும் ஏற்றுக் கொள்கிறேன்’ என்று பிறிதொரு குலத்தைச் சேர்ந்தவர் முன் வந்தாலும், குல வழிபாட்டில் மற்றவர்களைச் சேர்த்துக் கொள்ளுதல் இயலாத நிலையை இன்றும் நாம் பார்த்து வருகிறோம்.

ஆனால், மதம் அல்லது சமயத்தில் குல வேறுபாட்டிற்கு இடமில்லை. இதில் சேர்ந்துள்ளவர்கள் குல அடிப்படையில் சேராமல், கொள்கை அடிப்படையில் சேர்கின்றனர். ஆகவே, ‘சமயம்’ என்பது உலகிலுள்ள அனைத்து மக்களுக்கும் பொதுவான கொள்கையைத் தன்னகத்தே கொண்டதாகும். ‘இந்தக் கொள்கை என்ன’? என்னும் கேள்விக்கு உலக சமயங்கள் கொடுக்கும் விளக்கத்தை, அவை கடவுளை ஏற்றுக் கொள்ளும் ஆத்திக சமயமாக இருந்தாலும், கடவுளை மறுக்கும் நாத்திக சமயமாக இருந்தாலும் ‘சமயம்’ என்னும் அடிப்படையில் செயல்பட வேண்டுமானால் அது கீழ்க்காணும் ஐந்து கேள்விகளுக்கும் விடையளிப்பதாக இருக்கவேண்டும்.

அவை,

1.  நான் பிறப்பதற்குமுன் இருந்தேனா?

2. இருந்திருந்தால் எவ்வாறு இருந்தேன்?

3. இறப்பிற்குப் பின் இருப்பேனா?

4. இருந்தால் எவ்வாறு இருப்பேன்?

5. இவற்றின் அடிப்படையில் இவ்வுலகில் வாழும் முறை என்ன?     என்பனவாகும்.

இந்தக் கேள்விகளுக்குக் கடவுள் மறுப்புக் கொள்கையுடைய நாத்திக சமயங்கள், பிறவிச் சுழற்சிக் கொள்கையின் அடிப்படையிலும், கடவுள் கொள்கையுடைய ஆத்திக சமயங்கள் கடவுள் கொள்கையின் அடிப்படையிலும் விடை கொடுக்கின்றன.