உலக சமயங்களை ஒன்றிணைக்கும் தமிழர் சமயமும் தமிழர் ஆன்மவியலும்-15

2.2.8. இறையியல் – மெய்யியல்

இந்த விடைகள் கடவுள் கொள்கையாளர்களால் ‘இறையியல்’ எனவும், கடவுள் மறுப்புக் கொள்கையாளர்களால், இவர்கள் இறைவனை மறுக்கும் காரணத்தால், இறையியலுக்குப் பொருந்தாத ‘மெய்யியல்’ எனவும் அழைக்கப்படுகின்றன. இதனால், கடவுள் மறுப்புக் கொள்கையையுடைய நாத்திக சமயங்களின் மெய்யியலாகிய பிறவிச் சுழற்சிக் கொள்கையின் செல்வாக்கின் கீழ் இருக்கும் இந்திய ஆத்திக சமயங்களின் இறையியல், மெய்யியலில் அடக்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் தோன்றியுள்ள காட்சிகள் ஆறும் சமஸ்கிருதத்தில் ‘தரிசனம்’ என்னும் பெயரில் மெய்யியல் கொள்கைகளாக விளங்கிக் கொண்டிருக்கின்றன.

2.2.9. மெய்யியலில் அடக்கப்பட்டுள்ள இறையியல்

ஆனால், தமிழகத்தில் எழுந்த பக்தி இயக்கத்தின் பயனாக, தமிழகத்திலிருந்து எழுந்த அத்வைதம், விசிஷ்டாத்வைதம், துவைதம், சைவசித்தாந்தம் ஆகிய நான்கும் இறையியல் கொள்கைகளாக இருந்த போதிலும், இறை மறுப்புக் கொள்கையாகிய பிறவிச் சுழற்சிக் கொள்கையின் பிடியில் அகப்பட்டுள்ளமையால், ‘இறையியல்’ என்னும் பெயரில் குறிக்கப்படாமல், மெய்யியல் என்னும் பெயரில் அடக்கப்பட்டுள்ளன.

2.2.10. இந்தியாவின் ஒப்பற்ற ஒரே இறையியல் நூல்

மெய்கண்ட சாத்திரங்கள் எனப்படும் சைவ சித்தாந்த சாத்திரங்கள் பதினான்கின் அடிப்படை நூலான சிவஞானபோதம், பிறவிச் சுழற்சிக் கொள்கையின் பிடியில் அகப்படாமல் ‘இறையியல்’ என்னும் பெயருக்கு ஏற்ற முழுத் தகுதியுடைய நூலாக விளங்கிக் கொண்டிருக்கிறது. இந்த உண்மையைப் பிறவிச் சுழற்சிக் கொள்கையின் அடிப்படையில் இதற்கு எழுதப்பட்டுள்ள உரைகளை நீக்கி, நேரடியாகப் படிக்கின்றவர்கள் எளிதில் புரிந்து கொள்ள முடியும்.

மேலும், சைவசித்தாந்த சாத்திரங்கள் பதினான்கில், இதைத் தவிர மற்றப் பதின்மூன்று நூல்களும் இலக்கியம் எழுதப் பயன்படுத்தப்படும் செய்யுள் நடையில் எழுதப்பட்டுள்ளன. சிவஞானபோதம் மட்டும், தமிழ் இலக்கணம் எழுதப் பயன்படுத்தப்படும் ‘நூற்பா’ என்னும் சூத்திர நடையில் எழுதப்பட்டுள்ளது. இதனாலும் இது இலக்கண நூலாக விளங்கிக் கொண்டிருக்கிறது.

ஆகவே, இந்தியாவின் ஒப்பற்ற ஒரே இறையியல் இலக்கண நூலாக, சிவஞானபோதம் விளங்கிக் கொண்டிருக்கிறது. இறையியல் இலக்கண நூலாக மட்டுமல்லாது, உலகில் வேறெங்கும் தோன்றாத ஆன்மவியல் இலக்கண நூலாகவும் இது விளங்குவதைப் பின்னர் பார்க்க இருக்கின்றோம்.

[முனைவர் மு. தெய்வநாயகம் அவர்களின் “உலக சமயங்களை ஒன்றிணைக்கும் தமிழர் சமயமும் தமிழர் ஆன்மவியலும்” என்ற நூலில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.]