உலக சமயங்களை ஒன்றிணைக்கும் தமிழர் சமயமும் தமிழர் ஆன்மவியலும்-16

2.2.11. பிறவிச் சுழற்சிக் கொள்கையின் தோற்றம்

இந்திய இறையியல் கருத்துகளை, மெய்யியல் கருத்துகளே என மயங்க வைத்துள்ள பிறவிச் சுழற்சிக் கொள்கையின் தோற்றத்தை இப்பொழுது நோக்குவோம்.

பிறவிச் சுழற்சிக் கொள்கை சமண சமயம் உருவாகக் காரணமான மகாவீரரால் முழுமைப்படுத்தப்பட்டுள்ளது.

மனிதன் மற்ற அனைத்து உயிர்கள் மீதும் அன்பு செலுத்தி அனைத்து உயிரினங்களையும் அரவணைத்து வாழ வேண்டும் என்னும் சிறந்த நோக்கத்தை வற்புறுத்தவே, பிறவிச் சுழற்சிக் கொள்கை உருவாக்கப்பட்டு, பரப்பப்பட்டது. கடவுள் பெயரால் உயிரினங்கள் பலியிடப்பட்டு வந்தமையால், ‘பலி கூடாது’ என்றும், உயிரினங்கள் மீது அன்பு செலுத்த வேண்டும் என்றும் பலி மறுப்புக் கொள்கையின் அடிப்படையில், கடவுளை மறுக்க வேண்டிய கட்டாயத்தில் இது கடவுள் மறுப்புச் சமயமாக உருவாக்கப்பட்டது.

உலகிலுள்ள அனைத்து மக்களையும் இக் கொள்கையில் இணைக்கும் நிலையில், ‘சமயம்’ என்னும் நிலைக்கு ஏற்ப, நாம் முன்னர் பார்த்த ‘சமயம்’ என்பதற்கான அடிப்படைக் கேள்விகள் ஐந்தற்கும் விடை கிடைக்கக் கூடிய நிலையில் கடவுள் மறுப்புக் கொள்கையையுடைய பிறவிச் சுழற்சிக் கொள்கை முழுமைப்படுத்தப்பட்டது.

இன்றைய அறிவியலாளர்களாலும் அறிய இயலாத நிலையிலுள்ள உயிரை, இன்றைக்கு இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னரே, தெளிவாக அறிந்து அதன் அடிப்படையில் பிறவிச் சுழற்சிக் கொள்கையைக் கூறியுள்ளமை இந்திய மெய்யியல் சிந்தனையின் பழமையையும் சிறப்பையும் விளக்கிக் கொண்டிருப்பது ஆகும்.

பிறவிச் சுழற்சிக் கொள்கையின் அடிப்படையில், கடவுள் மறுப்புச் சமயமாக எழுந்த சமண சமயத்தின் செல்வாக்கைத் தமிழ் இலக்கண நூல்களிலும் நம்மால் காண முடிகிறது.

‘அனைத்து உயிர்களும் சமம்’ என்னும் கொள்கையின் அடிப்படையில் எழுந்த பிறவிச் சுழற்சிக் கொள்கையில், மற்ற உயிரினங்களை விட மனிதர்களுக்குச் சிறப்புக் கொடுக்கும் ஆறாவது அறிவு மறுக்கப்படுகிறது. மனிதன் ஐயறிவு விலங்குகளோடு சேர்த்து எண்ணப்படுகின்றான். இதனால், கடவுள் மறுப்பும் ஆறாவது அறிவு மறுப்பும் இணைக்கப்பட்டு கடவுளும் ஆறாவது அறிவும் மறுக்கப்படுகின்றன.

இந்த நிலையில், டார்வின் கொள்கையும் பிறவிச் சுழற்சிக் கொள்கையும் ஒன்று சேர்கின்றன.

ஆனால், டார்வின் கொள்கையில் உயிர் தனித்து அறியப்படவில்லை. பிறவிச் சுழற்சிக் கொள்கையில் உயிர் தனித்து அறியப்பட்டுள்ளது.

2.2.12. உண்மை உள்ளதா?

கடவுள் மறுப்பும், ஆறாவது அறிவு மறுப்பும் இணைந்த நிலையில், நீண்ட நெடுங்காலமாக ஒரு சமயம் நிலைத்து நிற்கிறது என்றால், அதன் கூற்றில் உண்மை உள்ளதா? என்பது ஆராயப்பட வேண்டிய ஒன்றாகும்.

‘கடவுள் மறுப்பு’ என்பது உலகம் முழுவதும் எங்கும், எப்பொழுதும் இருந்து வரும் கருத்து ஆகும்.

ஆனால், ஆறாவது அறிவு மறுப்பு என்பது அவ்வாறன்று; ஆறாவது அறிவைப் பற்றிய ஆய்வு உலகில் வேண்டிய அளவு வளரவில்லை என்பதே உண்மையாகும்.

இதனால், ஆறாவது அறிவு என்னும் ஒன்று இருக்கிறதா? என்று ஆராய வேண்டிய கடமை இந்த இடத்தில் நமக்கு ஏற்பட்டுள்ளது.

[ முனைவர் மு. தெய்வநாயகம் அவர்களின் “உலக சமயங்களை ஒன்றிணைக்கும் தமிழர் சமயமும் தமிழர் ஆன்மவியலும்” என்ற நூலில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. ]