044 26743842 / +91 9444817394 tamilarsamayam2010@gmail.com

2.2.13. ஆறாவது அறிவு என்னும் ஒரு தனி அறிவு இருக்கிறதா?

ஆறாவது அறிவு என்றால் என்ன? என்னும் கேள்விக்கு ஆறாவது அறிவு என்பது நன்மை எது? தீமை எது? எனப் பகுத்து அறியும் ‘பகுத்தறிவு’ என்று விளக்கம் கொடுக்கப்படுகிறது.

இந்தப் பகுத்தறிவு மனிதனுக்கு மட்டுமே இருக்கும் சிறப்பு அறிவா? இந்தப் பகுத்தறிவு மற்ற உயிரினங்களுக்கு இல்லை என்று கூறிவிட முடியுமா? என்னும் கேள்விகள் எழுந்து, மற்ற உயிரினங்களுக்கும் இந்தப் பகுத்தறிவு இருக்கிறதா? என ஆராயும் இன்றியமையாமையை நமக்கு ஏற்படுத்தியுள்ளது.

இந்த நோக்கில் மற்ற உயிரினங்களை நோக்குவோம்.

2.2.14. பகுத்தறிவு

மெழுகினால் ரொட்டியைப் போன்று செய்து ஒரு நாய்க்கு முன் போட்டு, நாயின் செயல்பாடுகளை நோக்குவோம்.            ரொட்டி போன்று காட்சியளிக்கும் மெழுகாலான பொருளை முதலில் கண்களால் பார்த்த நாய், தனக்கு உண்பதற்குக் கிடைக்கிறதென்று எண்ணி அதன் அருகில் வருகிறது. அதைத் தன் மூக்கினால் முகர்ந்து பார்க்கிறது. பின்னர் தன் நாவினால் நக்கிப் பார்க்கிறது. இறுதியில் இது, தான் உண்பதற்கு ஏற்ற பொருள் இல்லை என முடிவெடுத்து, அதை உண்ணாமல் ஒதுக்கிவிட்டுச் சென்றுவிடுகிறது. கண், மூக்கு, வாய் ஆகிய மூன்று புலன்களையும் நாய் பயன்படுத்தி, தன் உடலுக்கு நன்மை செய்யும் பொருளா? அல்லது தீமை செய்யும் பொருளா? என்பதைப் பகுத்து அறிந்து தன் உடலுக்கு நன்மை செய்யும் பொருள் இல்லை என்பதைத் தெரிந்து, முடிவெடுத்து, அதை உண்ணாமல் விட்டுவிட்டுச் சென்றுள்ளமை, நன்மை தீமை அறியும் செயலின் விளைவு என்பதை நம்மால் மறுக்க இயலுமா?

ஒரு குளத்தின் அருகில் மரக்கன்று ஒன்றை நடுகின்றோம். மரத்தின் வளர்ச்சியை உற்று நோக்குவோம். மரம் பல திசைகளிலும் தன் வேர்களைப் பரப்பி வளர்ந்து வருகின்றது. அதன் வேர்கள், மற்றத் திசைகளை விட குளத்திலுள்ள தண்ணீரை நோக்கியே அதிகம் சென்றுள்ளன. இதற்குக் காரணம், தன் வளர்ச்சிக்கு வேண்டிய தண்ணீரைப் பெற்றுக் கொள்ள அந்த மரம், குளத்தின் தண்ணீரை நோக்கி அதிகமான வேர்களை அனுப்பியிருக்கிறதென்றால், அந்த மரமும், தனக்குள்ள நன்மை தீமையை அறிந்து தன் உடல் அழியாமல் பாதுகாக்கும் செயலைச் செய்கிறது என்பதை எவ்வாறு மறுப்பது?

ஆகவே, நன்மை தீமை அறிதல் மனிதனுக்கு மட்டுமே உரிய ஆறாவது அறிவின் விளைவு என்றும், ஓரறிவு முதல் ஐந்தறிவு வரையுள்ள மற்ற உயிரினங்களுக்கு இந்த நன்மை தீமை அறியும் திறன் இல்லை என்றும் கூறுவது எவ்வாறு பொருந்தும்? என்னும் கேள்விகள் எழுகின்றன. நன்மை தீமையைப் பகுத்தறியும் அறிவு, ஓரறிவு முதல் ஐயறிவு வரையிலான உயிரினங்களுக்கு இல்லை என்று கூற முடியாது என்பதும், அவற்றிற்கும் பகுத்தறிவு இருக்கிறது என்பதும் விளங்குகின்றன. அதாவது உயிருள்ள அனைத்து உயிரினங்களுக்கும் இயல்பாகவே இந்தப் பகுத்தறிவு இருக்கின்ற காரணத்தால், இது இயல்பூக்கப் பகுத்தறிவாக (Natural Instinct) விளங்குகிறது. இது அனைத்து உயிரினங்களுக்கும் இயல்பானது. இது ஆறாவது அறிவுக்கு மட்டும் சொந்தமான பகுத்தறிவு அன்று.

[ முனைவர் மு. தெய்வநாயகம் அவர்களின் “உலக சமயங்களை ஒன்றிணைக்கும் தமிழர் சமயமும் தமிழர் ஆன்மவியலும்” என்ற நூலில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. ]