உலக சமயங்களை ஒன்றிணைக்கும் தமிழர் சமயமும் தமிழர் ஆன்மவியலும்-18

2.2.15. ஆறாவது அறிவுக்குரிய உறுப்பு எது?

ஓரறிவு முதல் ஐந்தறிவு வரையுள்ள உயிரினங்களுக்கு மெய், வாய், மூக்கு, கண், செவி ஆகிய ஐந்து உறுப்புகள் அவற்றின் உடலில் இருக்கின்றன.

”ஆறாவது அறிவை உடையவன் மனிதன்” என்று உரிமை பாராட்டும் மனிதனுக்கு ஆறாவது அறிவைக் கொடுக்கும் உறுப்பு எது? என்று கேட்டால் மனிதனுடைய உடலில், ஐந்தறிவைக் கொடுக்கும் ஐந்து உறுப்புகள் இருக்கின்றனவே தவிர, ஆறாவது அறிவைக் கொடுப்பதற்கு உரிய ஆறாவது உறுப்பு அவனுடைய உடலில் காணப்படவில்லை என்பது வியப்புக்குரிய செய்தியாகும்.

ஐந்து அறிவுக்குரிய ஐந்து உறுப்புகளை மனித உடலிலிருந்து வெட்டி எடுத்து விளக்கிக் காட்டும் மருத்துவரால், ஆறாவது அறிவைக் கொடுக்கும் உறுப்பை மனித உடலிலிருந்து வெட்டி எடுத்து விளக்கிக் காட்ட இயலவில்லை. அதாவது அப்படி ஓர் உறுப்பு மனித உடலில் இல்லை.

2.2.16. கேள்விக்குரியதாக மாறும் ஆறாவது அறிவு

ஆறாவது அறிவுக்குரிய உறுப்பு இல்லாமல் ஆறாவது அறிவு எப்படி ஏற்பட இயலும்? என்னும் கேள்வி நியாயமானதே. ஆறாவது அறிவு எனப்படும் நன்மை தீமையைப் பகுத்து அறியும் பகுத்தறிவு,

1. ஓரறிவு முதல் ஐயறிவு வரையிலான உயிரினங்கள் அனைத்திற்கும் இருப்பதாலும்,

2. ஆறாவது அறிவு மனிதனுக்கு மட்டுமே இருக்கிறது என உரிமை பாராட்டப்படும் மனித உடலில், ஆறாவது அறிவிற்கு உரிய உறுப்பு இல்லாமையாலும்,

ஆறாவது அறிவு இருக்கிறதென்பதும், இந்த ஆறாவது அறிவு மனிதனுக்கு மட்டுமே இருக்கிறதென்பதும் கேள்விக்குரியவையாக மாறி விடுகின்றன.

[ முனைவர் மு. தெய்வநாயகம் அவர்களின் “உலக சமயங்களை ஒன்றிணைக்கும் தமிழர் சமயமும் தமிழர் ஆன்மவியலும்” என்ற நூலில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. ]